மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படாத நிலையில், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாக சர்ச்சை நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தில், கடந்த 20-ந்தேதி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மதுரையில் 144 தடை உத்தரவு!
சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால், தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை நடவடிக்கை ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பதற்றமான சூழல் காணப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், திருப்பரங்குன்றம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு!
இதற்கிடையே, மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீபத்தூணில் ஏற்றப்படாத கார்த்திகை மகாதீபம்!
இந்தச் சூழலில், திருப்பரங்குன்றம் மலையில் மூலவரின் சிரசுக்கு நேராக அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த இந்து அமைப்பினர் மலை அடிவாரத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போலீசாருடன் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு!
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைப்பாதைக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீபம் தொடர்பான இந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More: வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை..! இந்த ரகசியங்களை பகிர்ந்தால் ஆபத்து..!


