தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில், இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் முதல்வர் அவர்களே..!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



