தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100%ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மனுதாரர், தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் மற்றும் அபய் பக்சந்த், அருண் குமார் அகர்வால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் வாதங்கள் கடந்த 18ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று காலை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியது.
அதன்படி, தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், “மின்னனு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் உறுதி செய்தது. தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக அனைத்து வித விசாரணைகளையும் நடத்தினோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், EVM-ல் கட்சி சின்னத்துடன் பார் கோர்டு பொருத்துவது குறித்து ஆராய வேண்டும் என நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார். தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் என நீதிபதி தத்தா கூறியுள்ளார்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் (VVPAT)இயந்திரங்கள் கடந்த 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது ஒரு சட்டமன்றத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.