நகர்ப்புற பகுதியில் குடிசையில் வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு குடிநீர், மின்சாரம்,திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடுகள் அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெற ஆதார் கட்டாயம் என்று என தமிழக அரசு தனது அரசாணை தெரிவித்திருக்கிறது. கீழ் கண்ட ஆவணங்கள் ஏதாவது ஒன்று இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அரசாணையில்; பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மூலமாக பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளைச் செய்து கொடுக்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணைப் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை,கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.