நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக 7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த மாதம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மறைவானார்.
தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தற்போது நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.