மத்திய அரசின் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டம் இந்திய தேயிலையின் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்; 2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புத் திட்டமானது சிறு தேயிலை விவசாயிகளை சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக திரட்டுவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது என்றார். தேயிலை உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை அதிகரிப்பது, அதிக மதிப்பு கூட்டல் பொருட்களை தயாரிப்பது ஆகியவற்றின் வாயிலாக அதிக விலை நிர்ணயம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த உதவித்தொகை திட்டம்.
மேலும் தேயிலை தோட்டங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட கருவிகள், இலைகளை எடுத்துச்செல்ல வாகனங்கள், இலைகளை உலர்த்த கொட்டகைகள், மரபுவழி, பச்சை மற்றும் சிறப்பு தேயிலைகள் உற்பத்திக்காக புதிதாக சிறு தொழிற்சாலைகளை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு உதவியும் ஆதரவையும் வழங்கி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.