மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது மணிப்பூர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான சூழலில், மணிப்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் தலைநகர் இம்பால் சாலையில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தினர். விமான நிலைய சாலை அருகே நடந்த இந்த பேரணி நடைபெற்று வந்தபோது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும் மாண்வர்கள் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து மணிப்பூர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பேரணியில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ;தவெக மாநாட்டின் தேதி மாற்றம்..? என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!