தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.