பொது பெட்டியில் பயணிக்க டிக்கெட் எடுத்துவிட்டு ஏசி பெட்டியில் பயணம் செய்த இளைஞனை ரயில்வே ஊழியர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் சரவணன் கோபி என்பவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக, மங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரயிலில் கடந்த அக்டோபர் 12-ந்தேதி பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பொது பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் பொதுப்பெட்டியில் பயணிக்காமல், ஏ.சி. பெட்டியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரயில்வேயில் தனியார் ஏஜென்சி ஊழியராக பணிபுரிந்து வரும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதாகு அனில் குமார் என்பவர், ஏ.சி. பெட்டியில் உள்ள பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் பொது டிக்கெட் எடுத்து விட்டு ஏ.சி. பெட்டியில் பயணித்த சரவணன் கோபியை கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தகறாறு முற்றவே, ஓடும் ரெயிலில் இருந்து சரவணன் கோபியை அனில் குமார் கீழே தள்ளி விட்டுள்ளார். இரவு 11.15 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. கீழே விழுந்த சரவணன் கோபி, நடைபாதையையொட்டி உள்ள தண்டவாளத்தில் விழுந்து உள்ளார். அவர் மீது ரயில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெண் பயணி தந்த தகவலின்பேரில், அனில் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்த அனில் குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
Read more ; போதிய பயணிகள் இல்லை… சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து..!!