ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிர்த்தெழுந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 25 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளைஞன் ரோஹிதாஷ் குமார். பெற்றோர் இல்லாத நிலையில் தனியாக காப்பகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக BDK மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
இதனையடுத்து உடல் இறுதி சடங்கிற்காக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்டைகள் அடுக்கப்பட்டு, கட்டையின் மீது இளைஞரின் உடல் வைக்கப்பட்டு எரியூட்ட தயார் செய்யப்பட்டது. உடல் தீ மூட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென இளைஞரின் உடலில் அசைவு தெரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள் சடங்கை நிறுத்தி உடனடியாக இளைஞரை பரிசோதித்தனர்.
அப்போதுதான் இளைஞர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இளைஞர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக மூன்று மருத்துவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
Read more ; “சாவுர வயசுல உனக்கு கள்ளக்காதல் கேக்குதா??” மருமகளுடன் சேர்ந்து, மாமியார் செய்த காரியம்…