சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது பேசுகையில், 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4 சதவிகித வாக்குகளை தான் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய தேர்தலை விட 14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அதிமுக 12.58 சதவிகித வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார். ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கை மிஞ்சும் வகையில் எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். அவர் சொல்லும் கணக்கை அடிப்படை அறிவு உள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எவ்வளவு தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும், குற்றங்களும் தான் மக்களுக்கு ஞாபகம் வரும்.
பிரதமர் மோடியை எதிர்த்து பேச எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா, துணிவு இருக்கிறதா? திமுக என்றால் மட்டும் எடப்பாடி கத்தி கத்தி பேசுகிறார். டங்க்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக எடப்பாடி பாஜகவை கண்டித்தாரா? திமுக என்றால், கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான் அடிப்படை. வரும் 2026 தேர்தலில் 200 வெல்வோம். 2026 தேர்தலில் வெல்லப்போவது திமுக கூட்டணி தான் 7 வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் இலக்கு என பேசினார்.
Read more : கால் செய்யும் போது இந்த ஆடியோ வருதா.. காலர் டியூன் மூலம் சைபர் க்ரைம் விழிப்புணர்வு..! – மத்திய அரசு