Tirupati: திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே புதன்கிழமை வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை… அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த 10 நாள்களும்வைகுண்ட துவாரம்’ எனப்படும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கும். ஜனவரி 10 ஆம் தேதி தொடங்க உள்ள 10 நாள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட்டுகளுக்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்தனர்.
`ஜனவரி 10, 11, 12-ம் தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 9-ம் தேதியான வியாழனன்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும்’’ என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று மதியம் முதலே கவுன்ட்டர்கள் முன்பாக பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியத்திருக்கின்றனர். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்திருக்கின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். “இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 40 யாத்ரீகர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். விசாரணை நடத்தப்படும்” என்று ராவ் ANI இடம் கூறினார். இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிந்ததும், அதற்கான ஏற்பாடுகளை ஏன் செய்ய முடியவில்லை என்றும் முதல்வர் நாயுடு கேள்வி எழுப்பினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாகக் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, இந்த துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார், “ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வினியோகம் செய்ய, 91 கவுன்டர்களை திறந்தோம்.. நெரிசல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் இறந்தனர், 40 பேர் காயம் அடைந்தனர், அவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தருகிறோம். சம்பவம் குறித்து நான் உண்மையாகவே பக்தர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என பிரதமர் அலுவலகம் X இல் பதிவிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். “திருப்பதி கோவிலில் ஏற்பட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று அமித் ஷா X இல் பதிவிட்டுள்ளார்.