ஆளுநரை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்; பாஜக மாநிலத் தலைவர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நான் கட்சியில் ஒரு தொண்டனாக பணியாற்றி கொண்டிருக்கிறேன். எனக்கு பதவி ஆசை இல்லை. நான் மாநில தலைவர் பதவிக்காக வேலைசெய்வதாக கூறப்படுவது உண்மையில்லை.
திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் தனியார் பள்ளிகளில், எத்தனையோ பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று மொழியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதைக்கேட்டால் இந்தி திணிப்பு என்கின்றனர். அதேபோல் வள்ளுவரின் கருத்துக்கள் அனைவருக்கும் சமமானது. அவர் வாழ்ந்த காலத்தில் திருவள்ளுவரின் ஆடை அலங்காரம் ஞானியை போலத்தான் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது.
தமிழ் மீதும், தமிழறிஞர்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் உரிமை, தமிழிசைக்கும் இருக்கிறது. மாநிலத்தின் ஓராண்டு செயல்திறனை வெளிப்படுத்தும் விதமாக தான் தமிழகம் சரிவு பாதையை நோக்கி செல்வதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். மக்களே அப்படி தான் நினைக்கின்றனர். ஆளுநர் தபால்காரர் வேலையை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்கிறார் துணை முதல்வர் உதயநிதி. முதல்வர் ஸ்டாலின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? எனவே ஆளுநரை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை என்றார்.