தந்தை இறந்த நிலையில், இறுதிச் சடங்குகள் செய்வதில் இரண்டு மகன்களுக்கு ஏற்பட்ட தகராறில், உடலை பாதியாக வெட்டித் தர கேட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதௌரா தால் கிராமத்தில் வசித்த தியானி சிங் கோஷ் என்பவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். 85 வயதான இவருக்கு தாமோதர் சிங் மற்றும் கிஷன் சிங் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். உயிரிழந்த தியானி சிங் கோஷ் தனது இளைய மகன் தாமோதர் சிங் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்வதற்காக தாமோதர் சிங் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டிருந்தார். தந்தை இறந்துவிட்டதை தெரிந்துக் கொண்ட மூத்த மகனான கிஷன் தனது குடும்பத்துடன் தாமோதர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, எனது தந்தையின் இறுதிச் சடங்குகளை நான் தான் செய்வேன் என்றும், மூத்த மகன் தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதே தந்தையின் ஆசை எனவும் தகராறு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிஷன், தனது தந்தையின் உடலை இரண்டு வெட்டி தனித்தனியே இறுதிச் சடங்குகளை செய்யலாம் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஆடிப்போயினர்.
வாக்குவாதம் முற்றவே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அப்பகுதி போலீசார் கிஷனுக்கு அறிவுரை கூறிச் சமாதானப்படுத்தியுள்ளனர். இறுதியில் குடும்பத்தினரின் சம்மதத்தின்படி தாமோதர் இறுதிச் சடங்குகளை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர், போலீசாரின் மேற்பார்வையின் கீழ் தியானி சிங் கோஷின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.