சென்னை ஈசிஆர் சாலையில் திமுக கொடிக் கட்டிய இரண்டு சொகுசு கார்கள் ரேஸ் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடந்த 25ஆம் தேதி இரவு இளம்பெண்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது காரை 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் வழிமறித்தனர். மேலும், இளம்பெண்களையும், அவருடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் காரை நோக்கி ஓடினர். இதனால், பயந்துபோன பெண்கள் அலறி கூச்சலிட்டனர்.
மேலும், தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்து தப்ப முயன்றனர். அப்போது, அந்த கும்பல் தங்கள் கார்களில் விரட்டி வந்தனர். திமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்த இளைஞர்கள், இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், திமுக கொட்டிக் கட்டிய இரண்டு சொகுசு கார்கள் சென்னை ஈசிஆர் சாலையில் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இரண்டு கார்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.