பெரும்பாலும் காலை டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசையாக தான் இருக்கும். ஆனால் அப்படி தினமும் இட்லி தோசை சாப்பிடுவது நல்லது அல்ல. அது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், தேவை இல்லாத பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இட்லி தோசை சாப்பிடக் கூடாது என்று அர்த்தம் இல்லை.
இட்லி தோசை நல்லது தான், ஆனால் தினமும் அதையே சாப்பிடக் கூடாது. அது தான் தவறு. நமது காலை உணவை பொறுத்து தான் நமது ஆரோக்கியம் இருக்கும். இதனால் முடிந்த வரை காலை உணவை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எது சிறந்த காலை உணவு என்று உங்களால் தேர்வு செய்ய முடியவில்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்போது உங்களுக்கு ஏற்ற காலை உணவு இது தான். ஆம், ராகியை தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து, அந்த பாலை நன்கு காய்ச்சி, அதில் தேவையான அளவு இனிப்பு மற்றும் நீரை ஊற்றி கிளறினால், சுவையான ராகி பால் தயார். இந்த பாலை நீங்கள் அடிக்கடி காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் உங்களின் உடல் வலுவாக இருப்பது மட்டும் இல்லாமல், தொப்பையும் குறையும். இந்த ராகி பாலின் விரிவான ரெசிபியை தெரிந்தக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. இதற்கு தேவையான பொருள்கள்..
* ராகி – 4 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் – 2 பெரிய சில்லு
* தண்ணீர் – தேவையான அளவு
* ஏலக்காய் – 1
* உப்பு – 1 சிட்டிகை
* நாட்டுச்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் – தேவையான அளவு
இப்போது ராகியை 2-3 முறை கைகளால் நன்கு பிசைந்து விட்டு கழுவுங்கள். பின்னர் சுத்தமான நீரை அதில் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில், ஊற வைத்த ராகியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் மெல்லிய துணி ஒன்றை விரித்து, அதில் அரைத்த ராகியை ஊற்றி, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த ராகி பாலை மிதமான தீயில் வைத்து, தொடர்ந்து கிளறி விட வேண்டும். பால் சற்று கெட்டியானதும் அதில் 1 சிட்டிகை உப்பு, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 ஏலக்காய் தட்டி சேர்த்து, நன்கு கிளற வேண்டும்.
இப்போது அந்த பாலில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ராகி பால் தயார். சுலபமாக செய்யும் இந்த பால் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Read more: வாட்டர் பாட்டிலில் இந்த ஒரு பொருளை போடுங்க.. மருந்தே இல்லாமல் பாதி வியாதி குணமாகிவிடும்