சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல், டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் ஆன நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளார். அதே வேளையில், அப்பெண்ணுக்கு வீராணம் துளசிமணியனூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடனும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரும் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த குமரவேல், பிரகாசை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குமரவேல், அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் அருகே மது குடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் குமரவேலிடம், குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளனர். திடீரென குமரவேலை தாக்கி கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
பின்னர், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். குமரவேலின் உறவினர்கள், இக்கொலை பற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குமரவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலையில் ஈடுபட்ட பிரகாஷ், அவரது நண்பர்களான மாணிக்கம், கனகராஜ் ஆகிய 3 பேரையும் நள்ளிரவில் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான 3 பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஒரு பெண்ணுடன் 2 பேர் தகாத உறவு வைத்துக்கொண்ட மோதலில் டெம்போ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more : குழு அமைப்பதெல்லாம் ஏமாற்று வேலை.. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நேரடியாக செயல்படுத்தனும்..!! – அன்புமணி ராமதாஸ்