20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 2 சக்கர மற்றும் கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகள் (ஆர்.வி.எஸ்.எஃப்) மற்றும் தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏ.டி.எஸ்) நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் தகுதியற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் திட்டம் அல்லது வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட (60+) ஆர்விஎஸ்எஃப்-களும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எழுபத்தைந்து (75+) ஏடிஎஸ்-களும் நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
பிஎஸ்-2 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பவை என வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 2 சக்கர மற்றும் கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது இதுபோல 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நடுத்தர வர்த்தக வாகனம் மற்றும் கனரக வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் முறையே ரூ.12 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதே வாகனங்கள் 20 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால் புதுப்பிப்பு கட்டணம் முறையே ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.36 ஆயிரமாக உயர்த்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.