அதிமுகவில் தற்போது நடப்பது அண்ணன் – தம்பி பிரச்சனை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்ட நிலையில், இந்த விழாவினை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து உரையாற்றினார். மேலும், அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “குடும்பத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை வரும்.. போகும். அதுபோலதான் அதிமுகவிலும் தற்போது வந்துள்ளது. இந்த பிரச்சனையை பற்றி செங்கோட்டையன் மிகத் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். செங்கோட்டையன் எங்கள் மூத்த சகோதரர் போன்றவர். செங்கோட்டையன் இல்லத்திற்கு அவர் கேட்காமலேயே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்” என்று கூறியிருக்கிறார்.