இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? இதனால் உடல் எடை குறையுமா? போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், இரவில் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், இப்படி இரவில் நடைபயிற்சி செய்வதால் செரிமானம் மேம்படுவது மட்டும் இல்லாமல், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது.
சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், கட்டாயம் இரவில் நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் தூக்கத்தின் தரம் மேம்படுவது மட்டும் இல்லாமல், மன அழுத்தமும் குறைகிறது. மேலும், இதய ஆரோக்கியம் மேம்படுத்துகிறது, வயிற்று உப்புசம் குறைகிறது, படைப்பாற்றலை மேம்படுகிறது மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
இது சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் செய்யும் இந்த சிறிய காரியம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். இன்றுள்ள காலகட்டத்தில், பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். மன அழுத்தத்தால் தான் உடலுக்கு பல வியாதிகள் ஏற்படுகிறது. மாதிரையாலும் குணப்படுத்த முடியாத இந்த மன அழுத்தம் இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதால் கணிசமாக குறைகிறது.
இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால், செரிமான அமைப்பு தூண்டப்படுகிறது. உணவு குடல் வழியாக நகர உதவுகிறது, இதனால் அஜீரணம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவுகள் பெரும்பாலும் உயர்ந்து விடும். அப்போது குறுகிய நடைப்பயிற்சி செய்யும் போது, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையும்.
இதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட பிறகு, லேசான நடைப்பயிற்சி செய்வதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இரவு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும். இதனால் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். 15-20 நிமிட லேசான நடைபயிற்சி கூட உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டும் இல்லாமல், எடை இழப்பிற்கு உதவுகிறது.
சாப்பாட்டுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வதால், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படுவது மட்டும் இல்லாமல், ரத்த அழுத்தம் குறைகிறது.