கென்யாவின் தலைநகரான நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் சம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் உமோஜா எனும் கிராமத்தில் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். முன்னர் இருந்து சம்பூர் இனப் பெண்கள் கணவனின் சொத்தாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் அவர்களுக்கு மிகக் குறைவான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு நில உரிமையோ விலங்கு உரிமையோ கிடையாது. பல சமயங்களில் இந்தப் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்களுடன் குழந்தைத் திருமணங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களையும் சந்திக்கின்றனர்.
1990 களில், பிரிட்டிஷ் வீரர்கள் இந்த இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு அவர்களது கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துவிட்டனர். அப்படி ஒரு குறிப்பிட்ட அளவிலான பெண்களை தங்களின் குடும்பங்களும் கணவன்மார்களும் ஒதுக்கி வைத்துள்ளனர். அதோடு அந்த காலத்தில் சம்பூர் பழங்குடியினப் பெண்களால் சுமார் 1400 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அப்போது ரெபெக்கா லோலோசோலி என்ற பெண்ணும் இதே சித்திரவதையை அனுபவித்தாள். யாரும் அவள் சொல்வதைக் கேட்காததால், அவர் சுமார் 15 பெண்களுடன் உமோஜா என்ற கிராமத்தை நிறுவினார். உமோஜா என்றால் ஒற்றுமை. இந்த கிராமத்தில் பெண்களிடையே ஒற்றுமை உள்ளது.
ஆண்கள் அவர்களை புரிந்துகொள்ளாமல் ஒதுக்கிவைத்ததால் இங்கு ஆண்கள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் என 200 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்துக்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. இங்கு வாழும் சம்புரு பெண்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்குப் பாரம்பரிய நகைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அங்கே வரும் பெண் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கும் வசதி அளித்து, கட்டணம் வசூலிக்கின்றனர்.
இக்கிராம்ம் பற்றிய தகவல்களை அறிந்த ஐக்கிய நாடுகள் அவை, 2005 ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் தலைவியான ரெபேக்கா லோலோசோலியை ஐக்கிய நாடுகள் அவைக்கு அழைத்துச் சிறப்பித்தது. அதன் பின்பே, உலகில் பெண்கள் மட்டுமே வாழும் தனிக்கிராமம் உமோஜா இருப்பது உலகத்திற்குத் தெரிய வந்தது.