ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால், இயற்கை வனச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழா தொடங்கி, மறுநாள் நாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “விடிய, விடிய நடைபெறும் நிகழ்வில் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவை விட விதிகளை மீறி அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஈஷா யோகா மையத்தில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வனச்சூழலை பாதிக்கும் வகையிலும், ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் வகையிலும் சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது என ஈஷா யோகா மையத்துக்கு உத்தரவிட வேண்டும் “என குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில்,, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Read more : குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டில் சைடு எஃபெக்ட் ஜாஸ்தியா..? அலர்டா இருங்க பெற்றோர்களே..!