பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த தகவல் வாகனங்கள் டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா
மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா நேற்று டெல்லி நிர்மான் பவனில் இருந்து பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் பற்றிய தகவல்களை சுமந்து செல்லும் ரதத்தையும் (தேர்), 10 வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மக்கள் மருந்தக தினம் 2025-ன் ஒரு வார கால கொண்டாட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; அரசின் இந்த உன்னதமான திட்டம் குறித்து விரிவான விழிப்புணர்வைப் பெற இது தொடர்பான நிகழ்ச்சிகளில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும்.
இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஜெனரிக் மருந்துகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி “மக்கள் மருந்தக தினமாக” கொண்டாடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 மார்ச் 1 முதல் 7 வரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒரு வார கால நிகழ்வுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட வாகனங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) மக்கள் மருந்தகங்கள் பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்கும்.
தரமான பொதுவான மருந்துகளை அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், ரசாயனம், உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறையால் பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஜெனரிக் மருந்துகளை விற்பதற்காக பிரத்யேக மக்கள் மருந்தக விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 28.02.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 15,000 மக்கள் மருந்தக மையங்கள் (JAKs) திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 2027 மார்ச் 31 க்குள் 25000 மக்கள் மருந்தகங்களைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மக்கள் மருந்தகங்களில் நடப்பு நிதியாண்டில், அதாவது 2024-25 நிதியாண்டில், 28.02.2025 வரை ரூ.1760 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த உன்னத திட்டத்தின் காரணமாக மக்களுக்கு சுமார் ரூ.30,000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .