கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு அருகே உள்ள கிராமத்தில், 20 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குமுளியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 26 வயதான பிரிஜித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி குமுளியில் உள்ள இளம்பெண்ணின் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
மேலும், அங்கு அந்த இளம்பெண்ணிடம், உனது தாய்க்கு உடல்நிலை சரி இல்லை எனவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் கூறியதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், பிரிஜித்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் பிரிஜித், அப்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும், அவர் அழைத்துச் சென்ற விடுதியின் அறையில், பிரிஜித்தின் நண்பரான அரணக்கல்லைச் சேர்ந்த 25 வயதான கார்த்திஷ் என்பவர் இருந்துள்ளார். இதையடுத்து, இருவரும் அப்பெண்ணை மிரட்டியது மட்டும் இல்லாமல், அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், பலாத்காரம் செய்வதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும், பலாத்காரம் செய்யும் போது எடுத்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால், அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குமுளி காவல்துறையினர், பிரிஜித்தை சிவகங்கையிலும், கார்த்திஷை ஓசூரிலும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பாரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.