டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1, குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I இல் அடங்கிய பதவிகளுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் 28ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து, 90 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி வெளியானது. அதில் 1,988 பேர் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024 டிசம்பர் மாதம் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 14ஆம் தேதியான நேற்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.