PM Modi foreign trip: மே 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிரதமர் நரேந்திர மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.258 கோடி செலவிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 2023 இல் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்காக ரூ.22 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்தியத் தூதரகங்கள் செய்த செலவுகள் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கேள்வி எழுப்பினார். ஹோட்டல் தங்குதல், சமூக வரவேற்புகள், போக்குவரத்து மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஒவ்வொரு வருகைக்கும் உள்ள செலவுகளின் விவரத்தையும் அவர் கோரினார். இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நாடு வாரியான செலவுகள், அதிகாரிகள், துணை, பாதுகாப்பு மற்றும் ஊடகக் குழுக்களுக்கான செலவுகள் உட்பட” தரவு பதிலில் அட்டவணைப்படுத்தப்பட்ட வடிவத்தில் வழங்கப்பட்டது. தரவுகளின்படி, ஜூன் 2023 இல் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது ரூ.22 கோடியே 89 லட்சத்து 68,509 செலவிடப்பட்டது, அதே நேரத்தில் செப்டம்பர் 2024 இல் அதே நாட்டிற்குச் சென்றபோது ரூ.15 கோடியே 33 லட்சத்து 76,348 செலவிடப்பட்டது. அட்டவணைப்படுத்தப்பட்ட தரவு, பிரதமர் மோடி மே 2022 இல் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்திலிருந்து டிசம்பர் 2024 இல் குவைத் வருகை வரை 38 பயணங்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, மே 2023 இல் பிரதமரின் ஜப்பான் பயணத்திற்கு ரூ.17 கோடியே 19 லட்சத்து 33,356 ஆகவும், மே 2022 இல் நேபாளப் பயணத்திற்கு ரூ.80 லட்சத்து 01,483 ஆகவும் செலவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், பிரதமர் டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்தார். 2023 ஆம் ஆண்டில், அவர் ஆஸ்திரேலியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
2024 ஆம் ஆண்டில், அவர் போலந்து (ரூ.10 கோடியே 10 லட்சத்து 18,686), உக்ரைன் ( ரூ2 கோடியே 52 லட்சத்து 01,169), ரஷ்யா ( ரூ. 5 கோடியே 34 லட்சத்து 71,726), இத்தாலி ( ரூ.14 கோடியே 36 லட்சத்து 55,289), பிரேசில் ( ரூ.5 கோடியே 51 லட்சத்து 86,592), மற்றும் கயானா ( ரூ.5 கோடியே 45 லட்சத்து 91,495) உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்றார். இந்த 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏற்பட்ட மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ.258 கோடி ஆகும்.
இதேபோல், அமைச்சர் தனது பதிலில் 2014 க்கு முந்தைய ஆண்டுகளுக்கான சில தொடர்புடைய தரவுகளையும் வழங்கினார். அதாவது 2011ம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்காக ரூ.10 கோடியே 74 லட்சத்து 27,363, 2013ல் ரஷ்ய பயணத்துக்காக ரூ. 9 கோடியே 95 லட்சத்து 76,890, 2011ல் பிரான்ஸ் பயணத்துக்கு ரூ.8 கோடியே 33 லட்சத்து 49,463 மற்றும் 2013ல் ஜெர்மனி பயணத்திற்கு ரூ.6 கோடியே 2 லட்சத்து 23,484 செலவிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பணவீக்கம் அல்லது நாணய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சரிசெய்யப்படாமல் உண்மையான செலவினங்களைக் காட்டுகின்றன” என்று அமைச்சர் கூறினார்.