மத்திய பிரதேசத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஜான் கெம் என்பவர் டாக்டராக பணியாற்றினார். பிரிட்டனை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வரவே, அந்த மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அறுவை சிகிச்சை செய்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜான் கெம் பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பல நோயாளிகள் பின்னர் இறந்துள்ளனர். விசாரணையில் அவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தோம். பிரிட்டனில் உள்ள டாக்டரை போன்றே போலி ஆவணங்களை அவர் தயார் செய்ததும், அவர் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது” என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் இதுவரை நிலைமை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மிஷன் மருத்துவமனையில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் கிடைத்த பிறகு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டு, அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக புகார்தாரர் தெரிவித்தார்.
Read more: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு.. பிரதமர் மோடி கொடியசைத்ததும் சீறிப்பாய்ந்த கப்பல்..!!