Pope Francis: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். ஈஸ்டர் திங்கட்கிழமை காலமான போப் பிரான்சிஸின் மறைவை முன்னிட்டு இந்தியா மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கிறது. மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியாவில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது. “செவ்வாய்க்கிழமை-ஏப்ரல் 22, மற்றும் புதன்கிழமை-ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்” என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துக்கம் எவ்வாறு அனுசரிக்கப்படும்: இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். துக்க காலத்தில் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு இல்லை. இறுதிச் சடங்கு நடைபெறும் நாளிலும் அரசு துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன்படி, போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றிய தனது செய்தியால் மில்லியன் கணக்கான மதங்களை ஊக்கப்படுத்தினார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த போப் பிரான்சிஸின் மறைவு அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். போப் பிரான்சிஸ் இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தியவர்.
மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன. அவரது மறைவால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேபோல், பிரான்சிஸின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்பு, அமைதி, ஒற்றுமை சார்ந்த தனது கருத்துக்களால் லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Readmore: உஷார்!. புதிய போலி 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம்!. மத்திய அரசு எச்சரிக்கை!. எப்படி கண்டுபிடிப்பது!.