சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதில் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்தது.
பின்னர், இந்த கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்பட்டது. ஆனாலும், ஆங்காங்கே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் பாதிக்கப்பட்டு தான் வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள 32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அந்த பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.