தமிழ்நாட்டைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் உன்னத நோக்கில், “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” (Drugs Free Tamil Nadu – Mass Pledge) எனும் மாநிலம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் நேரடியாகப் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியைச் செய்து வைக்கிறார். மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்நிகழ்வு அனைத்து மாவட்டங்களிலும் நேரலை மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அத்துடன், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இருவழி நேரலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முதலமைச்சர் உரையாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் “போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்” (Drug & Tobacco-Free Campus) என்ற புதிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ காணொலியை முதலமைச்சர் பொத்தானை அழுத்தி தொடங்கி வைக்கிறார்.
காணொலி வெளியீட்டிற்குப் பிறகு, மாநிலம் தழுவிய போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சியும் தொடங்கப்படுகிறது. இதற்காக செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுடன் இருவழி நேரலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட உள்ளன.
மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழாவில் பல்வேறு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் பணியில் துணிச்சலுடனும் சிறப்புடனும் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் – 2026” வழங்கப்பட உள்ளன.
அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வைச் சிறப்பாக முன்னெடுத்த 6 சிறந்த போதைப்பொருள் தடுப்பு மன்றங்களுக்கும் (Anti-Drug Clubs), 6 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த மாபெரும் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் அரசின் தொடர் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.


