கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. 45 வயதான அந்த நபருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பே திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனே மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியின் தாய் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். உடனே மருத்துவமனை நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது தந்தை தன்னை தவறாக தொட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் தந்தை தலைமறைவான நிலையில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவரை அந்தப் பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரித்த போது அந்த நபர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததும் பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமிக்கு டி என் ஏ பரிசோதனை செய்யவும் முடிவெடுத்துள்ளனர். பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.