இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது 100-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்திய அணிக்கும் ‘ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் XI’ (Rest of the World XI) அணிக்கும் இடையே சிறப்பு கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் (AGM) பிறகு, 2028-ஆம் ஆண்டு வரவிருக்கும் பிசிசிஐ-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2027 டிசம்பர் மாதம் தொடங்கி 2028 முழுவதும் ஒரு வருடம் நீடிக்கும் வகையில் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இது இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டங்களைக் கண்காணிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளில், ‘இந்தியா vs ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட்’ போட்டியும் ஒன்றாகும் என ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தத் திட்டம் மிக ஆரம்பக் கட்ட விவாதத்திலேயே உள்ளது. பிசிசிஐ தனது 100-வது ஆண்டு விழாவை எவ்வாறு முழுமையாக திட்டமிட்டு நடத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் ‘ஐசிசி வேர்ல்ட் XI’ அணி இதுவரை மொத்தம் 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2005-ல் ஆசியா XI மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2017-ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 2018-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் விளையாடியுள்ளன.
இருப்பினும், இந்திய அணி இதுவரை ‘ஐசிசி வேர்ல்ட் XI’ அணிக்கு எதிராக எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



