அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
➣ பள்ளி மாணவர்களின் உலகளாவிய கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய ‘தமிழ்நாடு அறிவுப் பாடத்திட்டம்’ முறைப்படி அறிமுகப்படுத்தப்படும்.
➣ மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ இயக்கத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் இலவசமாக வழங்கப்படும்.
➣ உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ‘ஓடி விளையாடு’ திட்டத்தின் மூலம் தினமும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடைகளும் வழங்கப்படும்.
➣ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வலுப்படுத்த 2 முதல் 9-ஆம் வகுப்பு வரை ‘திறன் பிளஸ்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 10.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
➣ எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
➣ பள்ளிக்குச் சுமையின்றி மகிழ்ச்சியோடு வருவதை உறுதிசெய்ய ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் கொண்டுவரப்பட்டு, மாதத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பை இல்லா நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும்.
➣ மாணவர்களின் தனித்துவமான கற்கும் ஆற்றலை ஊக்குவிக்க 500 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 68 மாணவர்களுக்கு ஏஐ (AI) சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.
➣ பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவுப் பணியிடங்களில் 358 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் புதிய பணி நியமனங்கள் வழங்கப்படும்.
➣ 2 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகளின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முழுமையான இலவசக் கல்வி வழங்கப்படும்.
➣ உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலமைச்சரின் பெருங்கனவுத் திட்டமாக, மீண்டும் பிரம்மாண்ட ‘உலகத் தமிழர் மாநாடு’ நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
➣ இணையம் மற்றும் கணினி வழியே தமிழ் மொழியை வளர்க்கும் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் ‘இணையத் தமிழ் செம்மல்’ என்ற புதிய விருது இருவருக்கு வழங்கப்படும்.
➣ அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதலாக ₹5.75 கோடி நிதி ஒதுக்கப்படும்.
➣ தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனி மாவட்டத்தில் ₹2.50 கோடி மதிப்பீட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
➣ வீரமங்கை வேலு நாச்சியார், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட கோட்டங்கள் நிறுவப்படும்.
➣ சென்னை பெருநகரப் பகுதிகளில் கழிவுநீரிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (Bio-CNG) தயாரிக்கும் புதிய திட்டம் தொடங்கப்படுவதோடு, பாதாள சாக்கடைப் பராமரிப்பு பணிகள் முழுமையாக இயந்திரமயமாக்கப்படும்.
➣ நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மின் சிக்கனத்தை ஏற்படுத்தவும் 1 லட்சம் புதிய எல்இடி (LED) தெருவிளக்குகள் பொருத்தப்படும்.


