வேலூர் மாவட்டம் இரங்காபுரம் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோயில், சமீப காலமாக பக்தர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றிருக்கிறது. சித்தர்கள் வழிபட்ட இடமாக கருதப்படும் இந்தக் கோவிலில், வருடத்தில் ஒருமுறை மட்டுமே நிகழும் அதிசய நிகழ்வு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
சிவபெருமானின் காவல் தெய்வமாக விளங்கும் பைரவருக்கு, தமிழகத்தில் பல சன்னதிகள் உள்ளன. ஆனால், இங்கு நடைபெறும் அரிய நிகழ்வு காரணமாகவே, இந்தக் கோவில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில், பைரவருக்கு அபிஷேகமும் அலங்காரமும் முடிந்ததும், அவரின் தலையில் பூ வைக்கப்பட்டு அதன் மீது எலுமிச்சம் பழம் வைக்கப்படுகிறது.
சில நொடிகளில், ஒரு “ஈ” பறந்து வந்து அந்த எலுமிச்சத்தில் அமர்ந்து சில விநாடிகள் கழித்து பறந்து சென்று விடுகிறது. அதன் பின், அந்த எலுமிச்சம் தானாகச் சுழன்று கீழே விழுகிறது. அதை அங்கு அமர்ந்திருக்கும் ஒருவர் கையில் பிடித்துக் கொள்வார். இந்த நிகழ்வு வருடந்தோறும் ஒரே நாளில் மட்டுமே நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எலுமிச்சை சுழலும் அதிசயத்திற்குப் பின், பைரவர் அருள்வாக்கு வழங்குவதாக நம்பப்படுகிறது. அதனைப் பெற்ற பக்தர்களின் பிரச்சனைகள் தீர்ந்து, மனக்குறைகள் நீங்குகின்றன என பலர் பகிர்ந்து வருகின்றனர். வேலூரிலிருந்து இரங்காபுரம் மலைமேல் உள்ள இக்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது. செங்கானத்திற்கும் நேரடி பஸ் வசதி இருக்கிறது. மேலும், இரங்காபுரத்திலிருந்து ஆட்டோவிலும் கோவிலுக்கு எளிதாகச் செல்லலாம்.
Read more: வீட்டில் ஒட்டடைகளை இந்த நாட்களில் சுத்தம் செய்யக்கூடாது!. மகாலட்சுமி வீட்டில் தங்கமாட்டாள்!.



