வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று வலுகுறையக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு திசையில் நகர்ந்து வரும் 26-ம் தேதி தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 27-ம் தேதி கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



