வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சாதகமாக உருவாகியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (அக்டோபர் 15) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அக்டோபர் 15 முதல் 18 வரை பரவலாக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தின் முதன்மை நீர் ஆதாரமாக விளங்கும் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், வழக்கத்தை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்து ‘சூப்பர் எல் நினோ’ உருவாகியுள்ளதாக பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் வரலாற்று சிறப்புமிக்க வானிலை நிகழ்வு என குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 1877-ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்த போதும், அதைத் தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட 200 மி.மீ அதிகமாக அதாவது 600 மி.மீ வரை பெருமழை கொட்டித் தீர்த்ததை நினைவுகூர்ந்துள்ளார்.
அதேசமயம், இந்த எல் நினோ நிகழ்வுக்கு பின் வரவுள்ள ‘மாறுதல் காலத்தில்’ (Transition Phase) மிக தீவிரமான மற்றும் கொடூரமான வெப்ப அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். கொதிக்கும் வெந்நீர் ஆறும் போது நீராவி வழி வெப்பம் வெளிப்படுவது போல, வெப்பமடைந்த பெருங்கடல் குளிர தொடங்கும் போது பெருமளவிலான வெப்ப ஆற்றல் வளிமண்டலத்திற்கு வெளியேறும். முன்னதாக 1998 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய தீவிர வெப்ப அலை பதிவானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அடுத்த ஆண்டு வரவிருக்கும் கடுமையான கோடை வெப்பம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் ஒரே கேடயமாக இந்த வடகிழக்கு பருவமழை மட்டுமே அமையும். கொங்கு மண்டலம் மற்றும் காவிரி பாசன உள் மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயரவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களின் நீர்நிலைகளில் சேமிப்பை அதிகரிக்கவும் இந்த மழை மிகவும் இன்றியமையாதது. பருவமழை தீவிரமடையும் போது சில நிமிடங்கள் பெய்யும் மேக வெடிப்பு மழையை கண்டு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், நீர்நிலைகள் வறண்டு உள்ளதால் முதல் கட்ட மழைநீர் எளிதில் உள்வாங்கப்படும் என்றும் கூறியுள்ள அவர், மழைநீரை முழுமையாக சேமிக்க மக்கள் இப்போதே திட்டமிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!



