பெரியகுளம் அருகே பண மோசடி கும்பல், மும்பை காவலரை ஏமாற்றி 35 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மேற்கு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமணன் என்ற காவலரிடம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், சேகர்பாபு ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்பு கொண்டனர். தங்களிடம் ஹவாலா பணம் 2 கோடி இருப்பதாகவும், 50 லட்சம் கொடுத்தால் அதை 2 கோடியாக மாற்றித் தருவதாகவும் கூறி, லட்சுமணனை பெரியகுளம் வரவழைத்தனர்.
இதையடுத்து லட்சுமணன் தனது உறவினர் கங்காதரனுடன் பெரியகுளம் வந்து லாட்ஜில் தங்கியிருந்தார். அவரிடம் 35 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. பணம் கொடுக்க சென்றபோது, செந்திலும் சேகர்பாபுவும் போலியான 2000 ரூபாய் நோட்டுகளை காட்டி ஏமாற்றினர். அப்போது திடீரென மற்றொரு கார் வந்து நின்றது.
அதில் இருந்த ஐந்து பேர், “நாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர்” என கூறி, லட்சுமணன், கங்காதரன், செந்தில், சேகர்பாபு ஆகிய நால்வரையும் அடித்து காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். ஆனால் லட்சுமணன் தான் மும்பை காவலர் என தெரிவித்ததும், அவரை பெரியகுளம் பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டு, 35 லட்சம் பணத்துடன் செந்திலும் சேகர்பாபுவும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெரியகுளம் போலீசார் விரைவில் விசாரணை நடத்தினர். இதில், ஆண்டிபட்டி அஜித்குமார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன், ராம்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பயன்படுத்திய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நரேந்திரன், 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்தவர்.
பல குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருந்ததால் முன்பே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய செந்திலும் சேகர்பாபுவையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது.