சென்னை திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடந்த மாதம் பலரைத் துரத்தி கடித்தது. அந்தச் சம்பவத்தில் கடிபட்டவர்களில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நஸ்ரூதின் (வயது 30) இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் மார்க்கெட் சென்றபோது ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய் நஸ்ரூதினை கடித்தது. அவர் உடனடியாக தடுப்பூசி போட்டிருந்தாலும், உடல் நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேபிஸ் எவ்வளவு ஆபத்து? ரேபிஸ் ஒரு உயிர்கொல்லி வைரஸ். இது கடியால் உடலுக்குள் நுழைந்து நரம்புகள் வழியாக மூளையைத் தாக்குகிறது. மூளையில் பெருகியதும் அது மூளைச் செயல்பாட்டை முடக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. நாய் மட்டுமல்ல குரங்கு, பூனை, வவ்வால், நரி போன்றவை மூலமாகவும் ரேபிஸ் பரவக்கூடும்.
எப்படி பரவுகிறது? பாதிக்கப்பட்ட உயிரினத்தின் கடி, உமிழ்நீர், திறந்த காயம், கண்கள் அல்லது வாய் வழியாக வைரஸ் நுழைகிறது. கால்/கைகள் போன்ற இடங்களில் கடித்தால் வைரஸ் மூளையை அடைய நேரம் ஆகும். ஆனால் முகம், கழுத்து, தோள்பட்டை போன்ற இடங்களில் கடித்தால் வைரஸ் உடனே மூளையைத் தாக்கிவிடும்.
அறிகுறிகள்:
* ஆரம்பம்: காய்ச்சல், தலைவலி, சோர்வு.
* முற்றிய நிலை: கடியிடத்தில் வலி/கூச்சு, தண்ணீரைக் கண்டால் பயம், அதிக கோபம், பயம், மனக்குழப்பம், உமிழ்நீர் அதிகம், சுவாசக்குறைவு, வலிப்பு. இந்த நிலை வந்துவிட்டால் மரணம் தவிர்க்க முடியாதது.