உங்கள் கிரெடிட் ஸ்கோர் (credit score) 730-க்குக் குறைவாக உள்ளதா? அப்படியானால், உங்களுக்குக் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. ‘எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு’ (Expected Credit Loss – ECL) எனப்படும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த RBI தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த புதிய விதிமுறைகளைச் செயல்படுத்த அது முடிவு செய்துள்ளது.
இந்த விதிமுறைகளின்படி, 730-க்கும் குறைவான CIBIL ஸ்கோர் கொண்டவர்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் கடுமையான கட்டுப்பாடுள் விதிக்கப்படும். இதனால், கடன் வரலாறு சிறப்பாக இல்லாத அல்லது குறைவாக உள்ளவர்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அடுத்த நிதியாண்டு முதல் ‘எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு’ (ECL) வழிகாட்டுதல்-2026 கட்டமைப்பை RBI அமல்படுத்தும். இது வங்கித் துறையில் ஒரு முக்கிய சீர்திருத்தமாகும். இந்தச் சீர்திருத்தங்களின்படி, 730-க்கும் குறைவான CIBIL ஸ்கோர் கொண்டவர்கள் கடன் பெறும்போது கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் பிணையம் (collateral) சமர்ப்பித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
நாட்டின் கடன் விண்ணப்பதாரர்களில் 62 சதவீதம் பேர் இந்தப் பிரிவில் வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நடைமுறையில், கடன் தவணை செலுத்தத் தவறிய பிறகுதான் வங்கிகள் நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் புதிய விதிமுறைகளின் கீழ், எதிர்காலத் தரவுகளைப் பயன்படுத்தி கடன் வாங்குபவரின் இடர் (risk) அளவை வங்கிகள் தொடர்ந்து மதிப்பிடும். தாமதமான EMI செலுத்துதல், நிலையற்ற வருமான முறைகள் மற்றும் கடன் பயன்பாட்டில் திடீர் அதிகரிப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு கடன் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படலாம்.
புதிய விதிமுறைகள் 730-க்கும் அதிகமான CIBIL ஸ்கோர் கொண்ட சுமார் 7 கோடி ‘பிரீமியம்’ வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும். அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் பல்வேறு வகையான போட்டித்தன்மை வாய்ந்த நிதித் தயாரிப்புகள் வழங்கப்படும். மற்றவர்களுக்குக் கடன் பெறுவது கடினமாகலாம்.
இருப்பினும், குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் (secured credit cards), படிப்படியாக உயரும் கடன் திட்டங்கள் (step-up loan products) மற்றும் நுண் கடன்கள் (micro-loans) போன்றவை வழங்கப்படும். தற்போது, நீண்ட காலமாகத் தங்களுடன் விசுவாசமாக இருக்கும் குறைந்த CIBIL ஸ்கோர் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால் இனிவரும் நாட்களில், இத்தகைய நடைமுறையின் கீழ் கடன் பெறுவது கடினமாகலாம்.. ஏனெனில் RBI-ன் புதிய விதிகள் இதற்கு அனுமதிப்பதில்லை.



