கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபூரில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
14 வயதான மாணவி, நேற்று முன்தினம் மாலை பள்ளி கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், வார்டன் சந்தேகமடைந்து அங்கு சென்றார். அப்போது சிறுமி, ரத்த வெள்ளத்தில், ஆண் குழந்தை பிறந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவர் ஷாஹாபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சிறுமி, குழந்தை இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் வெளியில் தெரிவிக்காமல் வைத்திருந்தது. எனினும், தகவல் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு சென்றடைந்தது. ஆணைய உறுப்பினர் சசிதர் கோசாம்பே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். அவர் கூறுகையில்: “பள்ளி முதல்வர் சம்பவத்தை மறைத்துவைத்தார். ரகசிய தகவல் மூலம் நாங்களே விசாரணை தொடங்கினோம்.
முதல்வர் உட்பட பள்ளி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்புடையோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறுமிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பரிசோதனை செய்வார்கள்,” என்றார்.
பள்ளி முதல்வர் பாசம்மா கூறுகையில்: “கடந்த மாதம் தான் முதல்வராக பொறுப்பேற்றேன். சிறுமி கர்ப்பமாக இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அடிக்கடி தலைவலி, உடல்வலி காரணமாக விடுமுறை கேட்டார். பிரசவித்தது மிகப்பெரிய அதிர்ச்சி. பெற்றோரிடம் தகவல் தெரிவித்தபோது, அவர்கள் எந்தவித எதிர்வினையும் காட்டவில்லை; அமைதியாக இருந்தனர்,” என்றார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.