உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 60 யாத்திரிகர்கள், ராஜஸ்தானின் கோகமேடி கோயிலுக்கு சிறப்பு தரிசனத்திற்காக டிராக்டரில் பயணம் செய்துள்ளனர். அதிகாலை 2.10 மணியளவில், புலந்த்ஷஹர்-அலிகார் எல்லையில் உள்ள ஆர்னியா பைபாஸ் அருகே, சென்ற போது டிராக்டர் மீது பின்புறம் வந்த லாரி மோதியது.
இதனால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 யாத்திரிகர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். உயிரிழந்த அனைவரும் காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் மூவர் தற்போது வென்டிலேட்டரில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து, மாவட்ட நீதவான் மற்றும் புலந்த்ஷஹர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் சிங் உட்பட மூத்த போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை பரிசோதித்தனர்.
எஸ்எஸ்பி தினேஷ் குமார் சிங் ANI-க்கு அளித்த பேட்டியில், “காஸ்கஞ்ச் மாவட்டத்திலிருந்து ராஜஸ்தானுக்கு சென்ற டிராக்டரில் சுமார் 61 பேர் பயணம் செய்தனர். பின்னால் வந்த கொள்கலன் லாரி அதிவேகமாக மோதியதில் டிராக்டர் கவிழ்ந்தது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்துள்ளனர். மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்தில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், லாரி அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட அந்த லாரி தற்போது போலீஸ் காவலில் உள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: பெரும் சோகம்! கேஜிஎஃப் பட நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!