மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமானங்களும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு பின்னர் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர். இதனால், சென்னை விமான நிலையம் எந்த நேரத்திலும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் சரக்கு விமானம் ஒன்று சென்னையில் தரையிறங்கும் போது தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கோலாம்பூர் நகரில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு விமானம் ரன்வேயில் இறங்கிய போது 4 வது எஞ்சினியில் தீ பற்றியதை விமானிகள் உணர்ந்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விமானம் நிறுத்தப்பதும் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலம் விமான நிறுத்தப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட போதிலும் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.