தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
பாஜகவில் கூட்டணிக்கு எதிராக செயல்படும் நபர்கள், கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போன்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு மாநில கட்சியின் துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகிப்பார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலைசாமி, ராஜலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், குப்புராமு உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை நயினார் நாகேந்திரன் அறிவித்து உள்ளார்.



