ஆப்பிள் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகியான பிரணீதா பூஜாரி, தற்போது தனது சொந்த AI-அடிப்படையிலான சுகாதார ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘UniqueHuman’-ஐத் தொடங்கியுள்ளார். இந்தத் தளம் முன்னெச்சரிக்கையான (Proactive) AI ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கிறது.
அதாவது, இந்த AI ஏஜெண்டுகள் மூலம் நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் முறையை மாற்றியமைப்பதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். முதற்கட்டமாக இந்நிறுவனம் மைக்ரேன் (Migraine – கடுமையான தலைவலி) பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தவுள்ளது.
X தளத்தில் தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அறிமுகப்படுத்தி பிரணீதா பூஜாரி குறிப்பிட்டதாவது, “நமது காலத்தில் நீண்டகாலமாக தொடரும் நோய்கள்தான் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனையாக இருக்கின்றன. ஆனால், நமது பழைய மருத்துவ முறைகள் அதற்கு தகுந்த மாதிரி இல்லை. அதனால், நோய்கள் தீவிரமடைவதற்கு முன்பே கவனித்துக் கொள்ளும் விதமாக, மருத்துவச் சேவைகள் முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். நாள்பட்ட நோய்களால் கஷ்டப்படுபவர்களுக்கு, ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக உதவக்கூடிய நவீன AI ஏஜெண்டுகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.”
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் எங்கு பிரச்சனை என்பதைக் கண்டுபிடித்து, நாள்பட்ட நோய்களின் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது ரொம்ப முக்கியம். அதற்கு எப்போதும் நம்மைத் கவனித்துக்கொள்ளக்கூடிய, முன்கூட்டியே செயல்படக்கூடிய மற்றும் கோடிக்கணக்கானோரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய நவீன மருத்துவ சேவை தேவைப்படுகிறது.
எங்கள் ‘UniqueHuman’ நிறுவனம் எந்தத் தடையுமின்றி விரிவடையக்கூடிய சேவையை வழங்குகிறது. உங்களின் பாதுகாப்பான தரவுகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து எங்கள் ஏஜெண்டுகள் முழுமையான சிகிச்சையைக் கவனித்துக்கொள்வார்கள். பொதுவாக ஹெல்த் ஆப்ஸ்களில் வடிவமைப்பு அவ்வளவாகப் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை; ஆனால், வழக்கமான ஆப்ஸைப் போல இல்லாமல், பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் வகையில் எங்கள் நிறுவனத்தை வடிவமைத்துள்ளோம் என்றார்.
UniqueHuman மற்றும் அதன் செயல்பாடு என்ன? தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மூலம் நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகளை மக்கள் நிர்வகிக்க இந்த AI-அடிப்படையிலான சுகாதார ஸ்டார்ட்அப் உதவுகிறது. பாரம்பரிய மருத்துவ முறையைப் போலன்றி, உடல்நலப் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து செயலூக்கமான நடவடிக்கைகளை எடுப்பதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நோயாளிக்குப் பராமரிப்பு வழங்கும் பல்வேறு கட்டங்களை நிர்வகிக்க இந்தத் தளம் AI ஏஜெண்டுகளைப் பயன்படுத்தும். இந்த ஏஜெண்டுகள் உடல்நிலை மாற்றங்களைக் கண்காணித்து, தனிப்பட்ட தேவைகளைக் கண்டறிந்து, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையைப் பெற உதவும்.
பிரணீதா பூஜாரி யார்? கல்வி மற்றும் பணி விவரங்கள்: பிரணீதா பூஜாரி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இவர் இந்திய தொழில்நுட்பக் கழகமான (IIT) கான்பூரில் பொறியியலில் BTech பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.



