பண்டிகைக் காலத்தையோ அல்லது புத்தாண்டு விடுமுறையையோ முன்னிட்டு சொந்த ஊர்களுக்கோ அல்லது சுற்றுலா தளங்களுக்கோ விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தால், உடனடியாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது நல்லது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் கட்டணம் கடந்த ஆண்டை விடப் பெருமளவில் உயர்ந்துள்ளது.
டெல்லி – ஹைதராபாத் வழித்தடத்தில் விமானக் கட்டணம் 68% வரையிலும், மும்பை – கொல்கத்தா வழித்தடத்தில் 51% வரையிலும் அதிகரித்துள்ளது. பண்டிகை மற்றும் ஆண்டிறுதிப் பயணங்கள் நெருங்கும் வேளையில், இந்தத் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும்.
மேலும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இண்டிகோ நிறுவனம் நாளை முதல் கட்டணத்தை உயர்த்துகிறது. உள்நாட்டு விமானங்களுக்கு 500கிமீ வரை கூடுதலாக ரூ.375 வசூலிக்கப்படும். 501 – 1,000 கிமீ வரை கூடுதலாக ரூ.600 உயர்த்தப்படுகிறது. சார்க் நாடுகளுகு 500 கிமீ வரை ரூ.1000, அதற்கு மேல் ரூ.3000, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா, வடக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ரூ.5,500, ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.10,000 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான ‘OAG’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் விமானங்கள் இயக்கப்படும் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 5% குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய ரக விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 1.2% மட்டுமே குறைந்துள்ளது.
இருக்கைகளின் எண்ணிக்கை பெரியளவில் குறையவில்லை என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பயணிகளுக்கு நேரத் தேர்வுகள் (departure options) குறைவாகவே கிடைக்கிறது. இதன் காரணமாகக் குறைந்த கட்டண இருக்கைகள் விரைவில் விற்றுத்தீர்ந்து விடுவதால், மீதமுள்ள டிக்கெட்டுகள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
செப்டம்பர் 1 முதல் நவம்பர் 10 வரையிலான சராசரி ஒருவழி கட்டணங்களின் அடிப்படையில் டெல்லி – ஹைதராபாத்: 68%, மும்பை – கொல்கத்தா: 51% உயர்வு, டெல்லி – கோவா: 39% உயர்வு, மும்பை – பெங்களூரு: 37% உயர்வு.
நடப்பு காலாண்டிலேயே டிசம்பர் 7 ஆம் தேதிதான் அதிகபட்சமாக 5,89,386 இருக்கைகள் அட்டவணைப்படுத்தப்பட்டு மிக அதிகப் பயணப் புழக்கம் கொண்ட நாளாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஆண்டின் உச்சகட்ட பயண நாளின் இருக்கை எண்ணிக்கையான 6,03,634 உடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். அதிகப் பயணத் தேவையும், குறைவான விமான சேவைகளும் ஒன்றுசேர்வதால் அன்றைய தினம் டிக்கெட் கட்டணம் விண்ணை முட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண உயர்வுக்கு மற்றொரு முக்கியக் காரணம் விமான எரிபொருள் (ATF) விலையேற்றமாகும். அக்டோபர் 1 முதல் விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.16 உயர்ந்து தற்போது சுமார் ரூ.137 ஆக உள்ளது (முன்பு ரூ.121 ஆக இருந்தது). விமான நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டுச் செலவில் 30% முதல் 40% வரை எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதால், இந்தக் கூடுதல் சுமை பயணிகளின் டிக்கெட் கட்டணத்தில் எதிரொலிக்கிறது.
விமானத் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் பயணத் தேதி நெருங்க நெருங்கக் கட்டணம் மேலும் 15% முதல் 20% வரை உயரக்கூடும் என ‘யாத்ரா நிறுவனம் கணித்துள்ளது. எனவே, பண்டிகைக் காலப் பயணத் தேதிகள் உறுதியாகியிருந்தால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்.



