கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலை உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது புதிய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி – விஜய் இடையிலான சந்திப்பு விரைவில் நடக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்கில் அதிமுக–தவெக கைகோர்க்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் பெருந்துயரத்திற்கு திமுக அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகள் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவாக நிற்கின்றன. பாஜக கூட தங்களின் நாடாளுமன்றக் குழுவை கரூருக்கு அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, “பிரம்மாண்ட கட்சி ஒன்று நம் கூட்டணிக்கு சேரும்” என குறிப்பிட்டிருந்தார். அது தவெகதானா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக–தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்தது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
தற்போது விஜய்க்கு ஏற்பட்ட பின்னடைவை அதிமுக தரப்பில் ஆதரவாக பேசுவதன் மூலம் சமாளிக்க முயற்சிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அதிமுக–தவெக இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



