அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு சென்றது பேசுபொருளாக மாறியது. பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். பின்னர் பசும்பொன் சென்ற மூவரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, “பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் விதிகள் இருக்கிறது என்றார்.



