திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த செல்வானந்தம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகளின் மிரட்டலே எனது இந்த முடிவுக்கு காரணம் என வாட்ஸ் அப்பில் அளித்த மரண வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வானந்தம், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன்களை தாமதமாகச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த வியாபாரிகள் இருவர், செல்வானந்தம் ரூ.80 லட்சம் கொடுக்கவேண்டும் என அவரது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக தெரிகிறது.
அவர்கள் இருவருக்கும் ஆதரவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் செல்வானந்தத்தை மிரட்டி 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என மொத்தம் 85 லட்சம் ரூபாய்க்கு காசோலையை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
மிரட்டல்களால் மன உளைச்சலில் இருந்த செல்வானந்தம், “என் உயிருக்கு காரணம் திமுக நிர்வாகிகள்” என்ற ஆடியோவை வெளியிட்டு, குண்டடத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷ மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன் செல்போனில் பதிவு செய்த இரு ஆடியோக்களும் தற்போது இணையத்தில் பரவியுள்ளன. அதில், வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டதுடன், திமுக நிர்வாகிகளின் அழுத்தத்தால் உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன் என செல்வானந்தம் தெரிவித்துள்ளார். என் மரணத்துக்குப் பின்னர், என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அழுதவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குண்டடம் போலீசார், தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், செல்வானந்தத்தின் உடலை வாங்கி கொள்ள மறுத்த குடும்பத்தினர், திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கோரி, கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Read more: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை…! வானிலை மையம் எச்சரிக்கை