கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதுபற்றி விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் கேபின் ஏ.சி.யில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டதாக தெரிவித்தார்.
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஏர் இந்தியா விமானம் விமான நிலையத்துக்கு திரும்பியதும், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
விரைவில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, ஏர் இந்தியா விமானம் மீண்டும் தனது சேவையை தொடங்கும் என்று தெரிவித்தார். ஏசியில் ஏற்பட்ட பழுதால் ஏர் இந்தியா விமானம் திரையிறக்கப்பட்ட சம்பவம் சிறிது நேர, பரபரப்பை ஏற்படுத்தியது. ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது விமான பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read more: நோட்…! ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் அஞ்சல் அலுவலகம் செயல்படாது…!