இந்தியத் தேர்தல் ஆணையமும், அதன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் தற்போது கடும் அரசியல் மற்றும் சட்ட சர்ச்சைகளின் மைய புள்ளியாக மாறியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், 2023-இல் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்ய முடியுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் பிரிவு 16, காவல் துறை கைது நடவடிக்கை மேற்கொள்வதை நேரடியாக தடுக்காவிட்டாலும், நீதிமன்றங்களின் கரங்களை கட்டுகிறது. தேர்தல் ஆணையர் தனது அதிகாரப்பூர்வக் கடமையைச் செய்யும்போது எடுக்கும் முடிவுகள் அல்லது செய்யும் செயல்களுக்காக, அவர் மீது எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கையும் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று இச்சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.
இருப்பினும், குறிப்பிட்ட கட்சிக்கு பயனளிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வது அல்லது தகுதியான வாக்காளர்களைத் திட்டமிட்டு நீக்குவது போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதை “அதிகாரப்பூர்வ கடமை” என்று கருத முடியாது எனச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தீவிர குற்றத்திற்கு ஆதாரம் இருந்தால் கைது செய்ய சட்டப்பூர்வமாக வழியிருந்தாலும், பிரிவு 16-ன் கீழ் தங்களுக்குள்ள பாதுகாப்பைக் கோரி ஆணையர்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுக முடியும் என்பதால், தற்போதைய சட்டத்தின்கீழ் தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்வது மிகவும் சிக்கலான நடைமுறையாகும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின் மூலம் இந்தச் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தவிர்த்து, பிற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குத் தங்களது கருத்து வேறுபாட்டைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பல முக்கிய முடிவுகள் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இறுதி முடிவுகள் எப்போதும் ஒருமனதாகவே எடுக்கப்படுகின்றன எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த செய்தியைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் “வாக்கு திருட்டு” நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது டெல்லி மற்றும் பெங்களூரு காவல் நிலையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதிகாரப்பூர்வப் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மார்ச் 2023-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், டிசம்பர் 2023-இல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூலம் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய கேபினட் அமைச்சர் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் தேர்வுக்குழுவில் அரசுக்கே பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதோடு, பிரிவு 16-ன் மூலம் ஆணையர்களுக்குப் பணி ஓய்வுக்குப் பிறகும் நீடிக்கும் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.



